கிராமத்திலுள்ள ஏரியில் ஏராளமான கொக்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் தாமரை குளம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கட்ரமணபுரம் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நேற்று காலை அதிகமான கொக்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு சென்று பார்த்த பொதுமக்கள் ஆங்காங்கே அரிசியில் ஏதோ கலந்து வைத்திருந்ததும் ஏரியின் தண்ணீரின் நிறமும் மாறி இருந்ததையும் பார்த்தனர். இந்நிலையில் அரிசியில் விஷம் கலந்து கொக்குகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் கோடை காலம் என்பதால் ஏரியில் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கும், விடுமுறை நாட்களில் சிறுவர்கள் மீன் பிடித்து சாப்பிடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.. இதனால் தண்ணீரை ஆய்வு செய்ய உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் குவனேஷ் உத்தரவின்பேரில் இறந்து கிடந்த 17கொக்குகளையும் கைப்பற்றினர். மேலும் கொக்குகளை ஒட்டகோவில் உள்ள கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்துள்ளார் .
இதைத் தொடர்ந்து உடற்கூறு பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு கொக்குகள் இறந்ததற்கான காரணம் தெரியும் என்றும் வனத்துறையினர் கூறினர்.மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வன குற்றம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.