Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளத்தில் முதலை…. வனத்துறையினரின் முயற்சி…. பீதியில் பொதுமக்கள்…!!

குளத்தில் புகுந்த முதலையை பிடிக்கும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சாத்தாங்குளம் கிராமத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து ராஜன் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் வழியாக 5 அடி நீளமுள்ள முதலை கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாத்தாங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் புகுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் முதலையை பிடிப்பதற்காக ஆடு மற்றும் கோழி போன்ற இறைச்சி கொண்டு தூண்டில் அமைத்து, குளக்கரையை சுற்றி பள்ளம் தோண்டி, அதில் இறைச்சியை வைத்து முதலையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது தண்ணீரிலிருந்து குளக்கரைக்கு வரும் முதலை வனத்துறையினரை கண்டதும் மீண்டும் தண்ணீருக்குள் சென்று மறைந்துவிடுகிறது. எனவே முதலை பிடிபடும் வரை பொதுமக்கள் யாரும் குளத்தின் அருகில் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகளை அவிழ்த்து விட வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவிப்புப் பலகை வைத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அதிநவீன கருவிகளைக் கொண்டு முதலையை விரைவாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |