குளம் தூர்வாருவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தை நகர்ப்புற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தூர்வாரி வருகின்றனர். இந்நிலையில் இந்த குளத்தை காமராஜர் நகரை சேர்ந்த சிலர் தூர்வாரி உள்ளனர் . இதனை பார்த்து ஆத்திரமடைந்த நெல்லிக்குப்பம் பகுதி மக்கள் தாங்கள் தான் குளத்தை துர்வார வேண்டும் என கூறி கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் காமராஜர் நகர் பகுதி மக்கள் குளத்தை தூர்வார மாட்டார்கள் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.