சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே மின் கம்பத்தின் இழுவை கம்பி அறுந்ததில் மின்கம்பம் முறிந்து மாற்றுத்திறனாளி பெண் மீது விழுந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகே நெடோடை கிராமத்தில் செபஸ்தியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கியசெல்வி (47) என்ற மகள் உள்ளார். இவர் மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு நேற்று முன்தினம் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆரோக்கியசெல்வி மீது மின்கம்பத்தில் இழுவை கம்பி அறுந்ததில் மின்கம்பம் திடீரென விழுந்தது. அதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் அவருடைய கால் முறிந்தது.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இதுபோன்று உடையும் நிலையில் பல இடங்களில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளன. அந்த மின்கம்பங்களை அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரியம் மாற்றி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.