கொடிவேரி காவிரியாற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சேவூர் மங்கரசு வளைய பாளையம் பகுதியில் வசித்து வரும் சாமிநாதன் என்பவருடைய மகன் இளங்கோ(19). இவர் சேவூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொண்டப்பன் நாயக்கன் பாளையத்தில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு இளங்கோ சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கொடிவேரி பவானி ஆற்றுக்கு இளங்கோ, அவருடைய சித்தப்பா மகன் சீனிவாசன், மாமன் மகன் அர்ஜுன் மற்றும் பாரதிக்குமார் ஆகிய 4 பேரும் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது சீனிவாசன், அர்ஜுன், பாரதிக்குமார் ஆகிய 3 பேரும்ஆற்றின் கரை ஓரத்தில் நின்று குளித்துள்ளார்கள் ஆனால் இளங்கோ மட்டும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தார்.இந்நிலையில் இளங்கோவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி விட்டார். வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.