தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொன்மனை பண்டாரக்கோணம் பகுதியில் மாதவி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாதவியின் கணவர் பாஸ்கரன் இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மாதவி மாலை நேரத்தில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மாதவியை தேடி அலைந்தனர்.
அப்போது குற்றியாணி பகுதியில் உள்ள கால்வாயில் மாதவியின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாதவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வலிப்பு ஏற்பட்டதால், குளித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி மாதவி இறந்தது தெரியவந்தது. இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.