குளித்தலையைச் சேர்ந்த பக்தர்கள் 33 மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே இருக்கும் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ரிச்சாண்டார் திருமலை, ஊர் பாறைப்பட்டி, அழகாபுரி, கவுண்டம்பட்டி, ஆலத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஒரு சமூகத்தினர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மாட்டு வண்டியில் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். இவர்கள் சென்ற 2017 ஆம் வருடம் வந்து வழிபாடு செய்த நிலையில் ஐந்து வருடங்களுக்கு பின் நேற்று வழிபாடு செய்துள்ளனர். நேற்று முன்தினம் 33 மாட்டு வண்டிகளில் சுமார் 300 பேர் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து ஊர் தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் எங்களது குலதெய்வம். எங்களது முன்னோர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று நேர்த்தி கடனை செலுத்தி வந்த நிலையில் நாங்களும் தலைமுறை தலைமுறையாக கடைபிடித்து வருகிறோம். நான்கு வருடங்கள் முடிந்த உடன் கோவிலுக்கு செல்ல உத்தரவு கேட்போம். உத்தரவு கிடைத்ததையடுத்து ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி கோவிலுக்கு செல்ல நாள் குறிப்போம். பின் கோவில் மாடுகளுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து ஒவ்வொரு வீடாக அழைத்துச் சென்று மாட்டிற்கு தானியங்கள் கொடுக்கப்படும். கோவில் மாடு சாப்பிட்டபிறகு இருக்கும் தானியங்களை பயன்படுத்தி நாங்கள் விவசாயம் செய்வோம். அவ்வாறு விதைக்கப்படும் விதைகள் செழித்து வளர்ந்து நிறைய லாபத்தை எங்களுக்கு கொடுக்கும் என கூறியுள்ளார்.