தண்ணீரில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் தண்டாயுதபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்க முயற்சி செய்தனர். அப்போது 3 சிறுவர்களை மட்டுமே மீட்க முடிந்தது. நீண்ட நேரம் தேடியும் அரவிந்த் குமாரை கண்டுபிடிக்க இயலவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அரவிந்த் குமாரின் சடலத்தை மீட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் அரவிந்த் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.