பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே மேக்காமண்டபம் வலிய வீட்டுவிளை பகுதியில் வினுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இந்தப் பகுதியில் இருக்கும் குளத்திற்கு விஜிகுமாரி குளிப்பதற்காக சென்றுள்ளார். இவர் குளித்துக் கொண்டிருக்கும் போது சுபின், சுரேஷ், டெல்பின் ஆகியோர் விஜிகுமாரியை கிண்டல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விஜிகுமாரி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து விஜிகுமாரியின் தாயார் சுரேஷ் உள்பட 3 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், சுபின், டெல்பின் ஆகிய 3 பேரும் விஜிகுமாரியின் வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து விஜிகுமாரி திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ் மற்றும் டெல்பினை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சுபினை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.