கிணற்றில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் சேரிப்பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கதிர் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது திடீரென கதிர் தண்ணீரில் மூழ்கிவிட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் கதிரின் சடலத்தை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.