நீரில் மூழ்கிய வாலிபரின் சடலத்தை 5 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் எனும் பகுதியில் சஞ்சீவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் கணினி பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவ் தனது தோழர்களான வானகரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் சோரஞ்சேரியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருடன் திருவள்ளூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து செல்லும் வழியில் அரண்வாயல் பகுதியில் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா நதி நீர் இணைப்பு கால்வாயில் நண்பர்கள் குளித்துள்ளனர். அப்போது நீர் வரத்து அதிகமாக இருந்ததால் சஞ்சீவ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனை பார்த்த இரு நண்பர்களும் சஞ்சீவை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் சஞ்சீவ் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கால்வாய் தண்ணீரை நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு 5 மணி நேரத்தில் சஞ்சீவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.