குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டையில் முஹம்மது யூனுஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஓரடியம்புலம் பள்ளிவாசலில் 24 நாட்களாக இமாமாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது யூனுஸ் ஓரடியம்புலம் அண்ணாநகரிலுள்ள தாமரைக் குளத்திற்கு குளிக்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் முகமது யூனுஸ் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குளத்திற்கு சென்று பார்த்தனர். ஆனால் முகமது யூனுஸ் அங்கே இல்லை.
அவர் குளிப்பதற்காக கொண்டு சென்ற வாளி மட்டும் அந்த இடத்தில் இருந்தது. இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கொடுத்த தகவலின்படி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் இறங்கி முகமது யூனுஸை சடலமாக மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் முகமது யூனுஸின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.