கன்னியாகுமரி கேரளா எல்லைப் பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வருகிறார். இவர் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் ராஜ் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது நண்பர் வெளியே நின்று கொண்டிருந்த போது ராஜ் மட்டும் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில் திடீரென காதலியின் வீட்டில் இருந்து வெளியே வந்த ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது காதலி குடிப்பதற்கு குளிர்பானமும், கசாயமும் கொடுத்ததாக ராஜ் கூறியதால் உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் மகனின் காதலி ராஜூக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஜெயராஜன் நிருபர்களிடம் கூறியதாவது, எனது மகன் காதலித்த பெண்ணிற்கு அவரது குடும்பத்தினர் ராணுவ வீரர் உடன் நிச்சயம் செய்து திருமணம் நடத்த முடிவு எடுத்தனர். ஜோதிடர் ஒருவர் அந்த பெண்ணிற்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என கூறியுள்ளார்.
இதனால் அந்த பெண் எனது மகனை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்துக் குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, ராஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. ஆனால் அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடுதல் பரிசோதனைக்காக ராஜின் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.