குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் மணிவண்ணன்-தொப்பாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதன் (6) என்ற மகனும் ரக்ஷனா (3) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மணிவண்ணன் வீட்டிற்கு முன்பாக குளிர்பானம் ஒன்று கிடந்துள்ளது. இதை மணிவண்ணனின் தாயார் எடுத்து குடித்துள்ளார். அதன்பிறகு ரக்ஷனாவிற்கும் குடிப்பதற்கு கொடுத்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் ரக்ஷனாவிற்கும் அவருடைய பாட்டிக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ரக்ஷனா மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே ரக்ஷனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.