கரூர் மாவட்டத்தில் உள்ள ராச்சாண்டார்திருமலை பகுதியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி வரகனேரியில் வசிக்கும் ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் என்பவரிடம் குளிர்பான நிறுவனம் தொடங்கி நடத்தலாம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி பெஸ்டின் மற்றும் அவரது நண்பர்களான ஞான சௌந்தரி, சகாயராஜ் ஆகியோர் தலா 8 லட்ச ரூபாய் வீதம் 24 லட்சம் ரூபாய் பணத்தை குளிர்பான நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மேலும் மூலப்பொருட்கள் வாங்குவதற்காக பெஸ்டின் மேலும் 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பங்குதாரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராஜாராம் தனது பெயருக்கு பதிலாக தனது மனைவி சின்னபொண்ணுவை பங்குதாரராக நியமித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நிறுவனத்தில் இருந்து விலகியவர்களுக்கு ராஜாராம் கொடுக்க வேண்டிய பணத்திற்காக 10 லட்ச ரூபாய் காசோலையும், 24 லட்சத்துக்கு கடன் பத்திரமும் வழங்கியதாக தெரிகிறது. ஆனால் இதுவரை பணம் கிடைக்காததால் பெஸ்டின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் ராஜாராம், சின்ன பொண்ணு ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். நேற்று தலைமறைவாக இருந்த ராஜாராமை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.