Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளின் … மனதில் NEGATIVE எண்ணங்களை உருவாக்கும் வார்த்தைகளை பேசாதீர்கள்..!!

குழந்தைகளிடம் தயவுசெய்து இந்த வார்த்தைகளை மட்டும் சொல்லாதீர்கள். அது அவர்களின் மனதில் நெகட்டிவ் எண்ணங்களை உருவாக்கும்..!!

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை, இதுதான் அதன் எல்லை  என்று வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் ஏராளமான விஷயங்கள் உள்ளது. குழந்தைகள் கண்ணாடியை போன்றவர்கள், நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள்.

நாம் என்ன பேசுகிறோம் அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாக பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத வார்த்தைகளை பற்றி பார்ப்போம்.

1.  எந்த சூழ்நிலையிலும் நீ ஒரு கெட்ட பையன், நீ ஒரு கெட்ட பொண்ணு இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலை கொண்டவர்கள். அவர்கள் தவறு செய்து விட்டாலும் குற்றவாளியாக்கும் வார்த்தைகளை சொல்லக்கூடாது. அதற்கு மாறாக ரொம்ப நல்ல பையன் இப்படி  நடந்து கொள்ளலாமா, இதனால் மற்றவர்கள் உன்னை என்ன நினைத்துக் கொள்வார்கள் என்று பக்குவமாக பேசி, நல்லது கெட்டதை புரியவைக்க வேண்டும்.

2.  நீ உன் சகோதரன், சகோதரி மாதிரி இல்லை என்று ஒப்பிடுவது வேண்டாம். உலகில் யாருமே பயன் இல்லாதவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவரோடு ஒப்பீடு செய்யும் பொழுது சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வியடைந்ததாக நினைப்பார்கள். இது சக குழந்தைகளிடையே பிரச்சனையை ஏற்படுத்தும்.

3. NO என்று எதற்கெடுத்தாலும் சொல்லாதீர்கள்,  குழந்தைகள் ஒரு விஷயத்தை கேட்கும் பொழுது இல்லை முடியாது இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர்களின் மீதான நம்பிக்கையை குறைக்கும். குழந்தைகள் கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.  இது ஏன் தேவை இல்லாதது இதுபோன்று சொல்லி விளக்கங்கள் கொடுங்கள் பக்குவமாக.

4.  நீ எல்லாம் இதை செய்யக்கூடாது, உன்னால் இதை செய்யவே முடியாது இது போன்ற தன்னம்பிக்கையை குறைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். தங்கள் சக்திக்கு மீறிய செயலை செய்ய முயலும் பொழுது உடன் இருந்து அவர்களுக்கு உதவுங்கள். கடினமானது என்றால் புரியவையுங்கள். முயற்சி மற்றும் தோல்விகளில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளுங்கள் . ஆரம்பத்திலேயே தடுக்கும் பொழுது புதிதாக செய்வதையே  நிறுத்திவிடுவார்கள்.

5.  என்னோடு பேசாதே என்ற வார்த்தைகள் வேண்டாம். பேசுதல் அரவணைத்தல் மூலமே பெற்றோர் குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே என்னோடு பேசாதே என முகத்தில் அடிப்பது போன்ற பேச்சை துண்டிக்காதீர்கள்.  குழந்தைகளின் மனதில் உள்ள விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளவும், விவாதிக்கவும் அனுமதியுங்கள்.

அதன் உடன்பாடு இல்லாத விஷயங்களை உங்கள் பேச்சில் வார்த்தைகளால் வெளிப்படுத்த தங்கள் பெற்றோர்களை முழுமையாக புரிந்து கொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது விவாதிப்பது தவிர்த்து, உன் வார்த்தைகளால் அப்செட் ஆகி விட்டேன் என்று சொல்லுங்கள். இதன் மூலம் உங்களுடன் எப்படி பேசுவது  என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

6. பசங்க இதை செய்யக்கூடாது, பெண்கள் அதை செய்யக்கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூக பிரச்சினைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகள் வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது பெண்களுக்கான வேல,  இது பசங்களுக்கான  வேலை என பிரிக்கக்கூடாது. வீட்டு வேலைகளில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள்.

7 . என்னை தனியாக விடு நிம்மதியாக இருக்கவிடு  என்பது போன்ற வார்த்தைகள் பிரயோகிக்க கூடாது. பெற்றோர்கள் மன அழுத்தத்தில், குழப்பமான சூழ்நிலையில் இருக்க நேர்ந்தாலும், உங்கள் சூழலை பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த மாதிரியான எதிர்மறையான வார்த்தைகளை கேட்கும் குழந்தைகள் பெற்றொருக்கு நம்மீது அன்பு இல்லை என்று நினைப்பார்கள். நீங்கள் பெரிய துயரத்தில் இருப்பது போன்று காட்டிக் கொள்ளாமல் பக்குவமாகப் பேசி திசைதிருப்ப வேண்டும்.

8. அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க ஆசிரியர் கிட்ட சொல்றேன் பாரு,  இது போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக அம்மாக்கள் அடிக்கடி இப்படி சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே ஆகும். ஆசிரியரையும், அப்பாவையும்  பயமுறுத்தும் ஒரு பிம்பமாக உருவாக்குவதும், அவர்களின் மீது பயத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒரு நாளும் பயத்துடன் கடக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும் பொழுது அந்த விஷயம் அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக் கொள்ள அனுமதியுங்கள்.

9. உன்ன மாதிரி ஒரு புள்ளைய யாருக்குமே பிடிக்காது, யாருமே உன்ன பத்தி யோசிக்க மாட்டாங்க இதுபோன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக குழந்தைகள் வீட்டில் விளையாடும் பொழுது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், வெளியே போ என்று நாமும் கத்தாமல் மெதுவாக பேசுங்கள். வெளியே போய் விளையாடுங்கள் என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால் எதனால் என்பதை ஆராய்ந்து சரி செய்யுங்கள்.

10. கடைசியாக எவ்வளவு பெரியவனாக இருந்தும் இப்படி செய்கிறாயே, ஆள்தான் பெருசா வளர்ந்திருக்க என்றெல்லாம் சொல்லாதீர்கள். குழந்தைகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மகிழ்ச்சி, தூக்கத்தை அவர்கள் வழியில் வெளிப்படுத்த அனுமதியுங்கள். குழந்தை விரும்பும் கிரிக்கெட் வீரர் சதம் அடிக்கும் பொழுது படுக்கையில் ஏறி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள், நீங்களும் கொண்டாடுங்கள். மாறாக நீங்கள் கோபப்படுவதால் அவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்.

ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியான உலகத்தை எதிர்கொள்ளத் உறுதுணையாக இருங்கள்..!

Categories

Tech |