டெல்லியில் இளம் பெண் ஒருவர் அவரது குழந்தைகள் முன்பே குத்தி கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொலை செய்த குற்றவாளி தப்பிஓடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது “தென்மேற்கு டெல்லி சாகர்பூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று பகல் அழைப்பு ஒன்று வந்தது. அதாவது பெண் ஒருவர் நடுரோட்டில் கத்திக் குத்து காயத்துடன் கிடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் மர்மநபர் ஒருவர் 24 வயது பெண்ணை துரத்தி வருகிறார்.
அவர் தன் குழந்தைகளுடன் ஓடுகிறார். இதில் விரட்டி வந்தவர் குழந்தைகள் முன்பே அப்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடுகிறார். இது தொடர்பாக விசாரித்ததில் கத்தியால் குத்திய நபர் அப்பெண்ணின் வீட்டின் அருகில் வசித்தவர் என மட்டும் தெரியவந்துள்ளது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையில் உயிரிழந்த பெண் ஆரத்தி என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இப்போது தலைமறைவாகவுள்ள குற்றவாளிகளை அடையாளம் காணவும், கண்டுபிடித்து கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.