கர்நாடகாவில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பள்ளிகளை உடனடியாக திறக்க முடியாது என்று மந்திரி சுரேஷ் குமார் கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்ற நிலையில், கல்லூரிகள் வருகின்ற 17 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு ஆலோசனை செய்து வருகிறது. பள்ளி கல்வி துறை மந்திரியை சுரேஷ்குமார் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று பள்ளிகள் திறப்பது பற்றி பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அதில் முதல் கட்டமாக எட்டாம் வகுப்பு முதல் பியு கல்லூரி வரை வகுப்புகளை தொடங்குவதற்கு ஆலோசனை செய்யப்பட்டது. இதுபற்றி சுரேஷ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” குழந்தைகளின் உடல் நலன் மட்டுமே முக்கியம். ஆனால் நீண்ட காலத்திற்கு அவர்கள் கல்வி கற்காமல் இருப்பதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் முக்கியம் என்பதால் பள்ளிகளை உடனடியாக திறக்கும் எந்த ஒரு திட்டமும் கிடையாது.
இது பற்றி பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் கற்றல் எப்படி இருக்கிறது, அதனால் ஏற்படும் பயன் மற்றும் சிக்கல்கள் பற்றி இன்று நடைபெறும் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்படும். பள்ளி கல்வி துறை கமிஷனர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பது பற்றி இரண்டு நாட்களில் ஒரு அறிக்கை வெளியிடுவார். அந்த அறிக்கை முதல் மந்திரியிடம் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகே பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.