பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கென குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 27 .11. 2021 அன்று பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவது துரிதப்படுத்துமாறும், வழக்குகளில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார். இந்த கூட்டத்தில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏதுவாக தனியாக இழப்பீடு நிதியை உருவாக்கி 148 பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1,99,95,000 வழங்கியுள்ளது .அடுத்தகட்டமாக அரசு 5 கோடி ஒதுக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடைக்கால இழப்பீடு மற்றும் இறுதி இழப்பீடு வழங்குவதற்காக, ரூபாய் 2.00 கோடி நிதியுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தை இழப்பீட்டு நிதிக்கு கூடுதல் நிதியாக ரூ.5.00 கோடி 2021-2022 ஆம் ஆண்டில் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார். இதனைத்தொடர்ந்து, அரசாணை எண்.88, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நாள் 07.12.2021 உரிய ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.