Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு பால் பவுடர் கிடைக்கல… ரொம்ப கஷ்டப்பட்டோம்…. கண்ணீர் மல்க தெரிவித்த இலங்கை அகதிகள்…!!

குழந்தைகளுக்கு பால் பவுடர் மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் கஷ்டப்படுவதாக இலங்கை அகதிகள் கண்ணீர் மல்க கூறினார்கள்.

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நேற்று முன்தினம் வந்துள்ள இலங்கை முல்லைத்தீவு மாவட்டம்  செல்வபுரம் பகுதியில் உள்ள சுசீகலா அழுதுகொண்டே பேசியதாவது, எனது கணவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனையால் அங்கு அனைத்து பொருள்களும் பல மடங்கு விலை அதிகரித்துள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு பால் பவுடர், மருந்து பொருட்கள் கூட கிடைப்பது அரிதாக இருந்தது. குழந்தைகளை காப்பாற்றி உயிர் வாழ வேண்டும் என்பதற்காக படகுகளுக்கு ரூ 50,000 கொடுத்து இங்கு வந்துள்ளோம் என்றார். மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ஆகியோரின் குடும்ப அரசியல் தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து மூன்று மாத கர்ப்பிணி மனைவியுடன் வந்த கோடீஸ்வரன் பேசியதாவது, நான் இலங்கையில் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றேன். இந்நிலையில் விவசாயம் செய்வதற்கு தேவையான பூச்சி மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பது அரிதாக இருப்பதால் விவசாயம்  முழுமையாகப் பாதிக்கப்பட்டது. எனது மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரை மிகவும் கவனமாக பார்க்கவேண்டும் என்பதற்காக மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்து அந்தத் தொகையின் மூலம் படகில் ஏறி இங்கு வந்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து இலங்கையிலிருந்து வந்த சுதா பேசியதாவது, இலங்கையின் பொருளாதார பிரச்சினை காரணமாக அத்தியவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ 300, ஒரு கிலோ சீனி ரூ 600, பிரட் பாக்கெட் ரூ 600, ஒரு பிஸ்கட் பாக்கெட் ரூ300 என்று அனைத்து பொருட்களும் பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வேலை வாய்ப்பு, மின்சாரம் இல்லாமல் மருந்து பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் நிறைய கஷ்டங்களை சந்தித்து வாழ்ந்து வருகின்றனர் என்றார்.

மேலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்குவதற்கு கஷ்டமாக இருக்கிறது. குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளோம். அகதிகளாக வந்த எங்களை தமிழ்நாடு ஆதரிக்கும் என்று நம்பிக்கையோடு இங்கு வந்திருக்கிறோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Categories

Tech |