விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி தனது மனைவி உமாதேவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் மருதுபாண்டி என்பவர் உமாதேவி 9 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் உமாதேவி மீது 10-க்கும் மேற்பட்டவர்கள் பண மோசடி புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் உமா தனது குழந்தைகளுடன் தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் மதுரையில் பதுங்கியிருந்த உமாவை கைது செய்ததோடு, அவரது 2 குழந்தைகளையும் மீட்டு கணேசனிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் உமா 30-க்கும் மேற்பட்டவர்களிடம் ஏலசீட்டு நடத்துவதாக கூறி சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேலாக பண மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.