2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாயை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்புதூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு வினில் குமார் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கும் ரமேஷ் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து ரமேஷ் திட்டியதை நினைத்து மன உளைச்சலில் இருந்த செல்வி வினில் குமார் மற்றும் மாளவிகா ஆகியோரை அழைத்து கொண்டு வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுக்கு சென்றுள்ளார். அதன் பின் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 2 குழந்தைகளையும் வீசிவிட்டு செல்வியும் குதித்துவிட்டார். இதில் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வியை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்று படிக்கட்டில் மயங்கி கிடந்த செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் செல்வி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து கொடுமுடி ஜூடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.