Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் இறப்பு விகிதத்தில் சாதனை படைத்த இந்தியா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

இந்திய மாதிரிபதிவு அமைப்பு குழந்தைகள் இறப்பு விகிதம் பற்றி புள்ளிவிவர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா ஒரு முக்கிய சாதனையை படைத்து இருக்கிறது. 2030ம் வருடத்திற்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக, சென்ற 2014ம் வருடம் முதல் குழந்தைகள் இறப்புவிகிதம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது. இந்திய மாதிரிபதிவு 2020-ன் படி, குழந்தை இறப்பு விகிதம் 2019-ல் 30 ஆக இருந்த நிலையில், 2020 ஆம் வருடம் 2 புள்ளிகள் சரிந்து 28 ஆக பதிவாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி கிராமப்புற, நகர்புற குழந்தை இறப்பு வேறுபாடு 12 புள்ளிகளாக குறைந்து உள்ளது.

கடந்த 2020ம் வருடத்தில் பாலின வேறுபாடு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பிறந்த குழந்தை இறப்பு விகிதத்தில் நிலையான வளர்ச்சி கொள்கை (2030 க்குள் 12-க்கும் குறைவு) இலக்கை கேரளா, டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜம்மு, காஷ்மீர் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் தற்போதே எட்டிவிட்டது. அத்துடன் 5 வயதிற்க்கு உட்பட்ட குழந்தை இறப்பு விகிதத்தின் நிலையான வளர்ச்சி கொள்கை (2030 க்குள் 24-க்கும் குறைவு) இலக்கை கேரளா, தமிழ்நாடு, டெல்லி, மராட்டியம், ஜம்மு- காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் எட்டிவிட்டது.

இச்சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர். மன்சுக் மாண்டவியா, பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். அத்துடன் குழந்தை இறப்பை குறைப்பதற்கு அயராது உழைத்த அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இந்திய மாதிரிபதிவு 2020 அறிக்கையின் படி, குழந்தை இறப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடியின் சிறந்த தலைமையின் கீழ், மத்திய -மாநில அரசுகளின் சிறந்த நட்புறவு மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பால் 2030-க்குள் குழந்தை இறப்பை குறைப்பதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்ட இந்தியா தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |