இங்கிலாந்தில் குழந்தையின் படுக்கைக்கு கீழே பாம்பு தோல் கிடப்பதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
இங்கிலாந்தை சேர்ந்த தம்பதிகள் பெத்தன் பால்டுவின் பியர்ஸ் (25 வயது) – கைலேயி (23 வயது). இவர்களுக்கு ஹார்வி (2 வயது) என்ற ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் சம்பவத்தன்று வீட்டின் படிக்கட்டு அருகே பாதி தின்று விட்டு போடப்பட்ட ஒரு எலி கிடப்பதையும், பாம்பு தோல் ஒன்று கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் தங்கள் வீட்டில் பாம்பு இருக்கிறது என்று நினைத்து பயந்து போன இவர்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நிபுணர்களை தொடர்பு கொண்டு தங்கள் வீட்டிற்கு வரவழைத்து சோதனை செய்து பார்த்துள்ளனர். அவர்கள் செய்த சோதனையில் குழந்தை தூங்கும் படுக்கையின் கீழ் மற்றொரு பாம்புத்தோல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அந்த வீட்டில் பாம்பு எதுவும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இதனிடையே பாம்பு பிடிக்கும் நிபுணர்கள் வீட்டின் சுவர் ஓரங்களில் மாவுப்பொடியை கொட்டிவையுங்கள் அதன்மீது பாம்பு உந்து போனால் அதன் தடத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம் என்ற ஆலோசனையை சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டனர். இதனால் அந்த தம்பதிகள் கடும் பயத்தில் உள்ளனர். இதனையடுத்து அந்த தம்பதிகள் “அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சென்று நீங்கள் செல்லப்பிராணியாக பாம்பை வளர்த்தால் அது உங்களிடம் இருக்கிறதா உறுதிப்படுத்துக் கொள்ளுங்கள்?” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.