மர்மமான முறையில் குழந்தையுடன் பெண் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே காஸ்தியான்வெட்டி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் குழந்தையுடன் பெண் சடலமாக மிதந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியைடைந்த பொதுமக்கள் ஆற்காடு டவுன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் இருந்த 2 பேரின் சடலத்தையும் மீட்டனர்.
அதன்பிறகு 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கிணற்றில் சடலமாக கிடந்த அந்த பெண்ணிற்கு 35 வயது இருக்கும் எனவும், பெண் குழந்தைக்கு 3 வயது இருக்கும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவரகள் தாய் மற்றும் மகளாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்ட பெண் மற்றும் குழந்தையின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.