மர்மமான முறையில் இளம்பெண் குழந்தையுடன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் முத்து(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி(27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்துவுக்கும் காயத்ரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வீட்டு மாடியில் மர்மமான முறையில் காயத்ரியும், குழந்தையும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாய் மற்றும் குழந்தையின் சடலங்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.