கடலூர் மாவட்டம் ராம நத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமத்தில் வசித்து வருபவர் பச்சமுத்து மகன் பாண்டியன்(24). இதில் பாண்டியனுக்கும் 14 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான காவல்துறையினர் கொரக்கவாடி கிராமத்துக்கு சென்று விசாரரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில் பாண்டியனுக்கும், 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்துவைக்க நிச்சயதார்த்தம் செய்திருப்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் இருவருடைய பெற்றோர்களிடம் 18 வயது பூர்த்தியடையாமல் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்றும் மீறி செய்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் அச்சிறுமியை மீட்டு கடலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதன் காரணமாக சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.