திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் பெற பரிகார பூஜை செய்வதாக கூறி தம்பதியினரை போலி சாமியார் கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் ஆறுமுகம் ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவரது மகனுக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் அவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசி துன்புறுத்தியுள்ளனர். அதனால் மிகுந்த மன உளைச்சலில் அவர்கள் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை கிடைப்பதற்காக யார் என்ன சொன்னாலும் அதனை செய்வதற்கான மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை சாதகமாக பயன்படுத்திய போலி சாமியார் கும்பல் பரிகார பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறினர். அதற்காக அந்த தம்பதியினரை அதிகாலை 4 மணிக்கு பூஜை செய்ய வரவழைத்துள்ளனர். அப்போது அந்த தம்பதியை சரமாரியாக வெட்டி விட்டு நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து அந்த கும்பல் சென்று விட்டது. அதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.