வறுமையினால் பிறந்து ஒன்பது நாட்கள் ஆன குழந்தையை பெற்ற தாய் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் இருக்கும் சம்பல்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் தனக்குப் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்று பெண்ணின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அங்கு பெண்ணின் தந்தை மட்டுமே இருந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது குழந்தையை விற்ற பெண்ணிற்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருப்பதும் அவரது கணவர் அவரை விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. அதோடு ஊரடங்கில் வறுமை வாட்டியதால் தனது மகள் பெற்ற குழந்தையை விற்று விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய தம்பதியிடம் காவல்துறையினர் விசாரித்தனர்.
அவர்கள் தாங்கள் முறையாக குழந்தையை தத்தெடுத்ததாக கூறிய நிலையில் அதற்கான ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லை. இதனால் குழந்தையை அவர்களிடம் இருந்து வாங்கிய காவல்துறையினர் பத்திரமாக குழந்தைகள் நல வாரியத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்து பெற்ற குழந்தையை விற்ற தாயையும் வாங்கிய தம்பதியையும் கைது செய்தனர்.