குழந்தை பெறுவதற்கு பரிகாரம் செய்ய வேண்டி பாலியல் தொழில் செய்து வந்த இரண்டு பேரை அழைத்து வந்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்த பாண்டு பதோரி என்பவரின் மனைவி மம்தா. பாண்டு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லை. இது சம்பந்தமாக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு மந்திரவாதி இருப்பதாகவும், அவரிடம் பூஜை செய்தால் குழந்தை கிடைக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர். இதை நம்பிய இந்த தம்பதிகள் அங்கு சென்று மந்திரவாதியை பார்த்துள்ளனர். அவர் ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூற, அதையும் நம்பி அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கின.
இவர்களுக்கு உதவுவதற்கு மம்தாவின் அக்கா மீரா முன்வந்தார். மீராவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனாவர். அவர் நீரஜ் பார்மர் என்ற நபரை திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருகிறார். இதையடுத்து நரபலி கொடுப்பதற்கு யாராவது அனாதைகள் கிடைப்பார்களா என்று தேடி பார்த்துள்ளனர். அப்போதுதான் நீரஜ்க்கு ஒரு யோசனை தோன்றியது. விபச்சார அழகிகளை அழைத்து வந்து நரபலி கொடுத்தால் அவர்களை யாரும் தேட மாட்டார்கள். நாம் பிடி படமாட்டோம் என்று எண்ணி அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.
அதன்படி ஒரு விபச்சார அழகியை நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து வந்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மந்திரவாதியிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர் அந்த பெண் இறந்த முறை தவறாக உள்ளது. இவரை வைத்து பூஜை செய்ய முடியாது என்று கூறியுள்ளார். பின்னர் அவருடைய பிணத்தை நீரஜ் இரவில் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று ஒரு ரகசிய இடத்தில் போட்டுவிட முடிவு செய்து, கொண்டு சென்ற போது வழியில் பிணம் தவறி விழுந்தது, பின்னர் அருகிலிருந்த முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டார். அடுத்ததாக மந்திரவாதி கூறியபடி மற்றொரு பெண்ணை அழைத்து வந்து வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் அவரது உடலை வைத்து மந்திரவாதி பூஜை செய்தார்.
இதற்கிடையில் புதரில் வீசப்பட்ட பெண் உடல் குறித்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் நீரஜ் அந்த பெண்ணை அழைத்து சென்ற அனைத்தும் பதிவாகி இருந்தது. இதையடுத்து நீரஜை பிடித்து போலீசார் விசாரித்ததில் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் இரண்டாவது பெண்ணின் உடலும் கைப்பற்றப்பட்டு, இந்த சம்பவத்தை செய்த பாண்டு, மனைவி மம்தா, அவரது அக்காள் மீரா, மந்திரவாதி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.