அனல்மின் நிலையம் செல்லும் ராட்சத குழாய் உடைந்து தண்ணீர் வீணான நிலையில் அதனை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரிலிருந்து காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் திடீரென அனல்மின் நிலையம் செல்லும் குழாய் உடைந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலையத்தில் தண்ணீரை ஏற்றும் மோட்டார்களை தற்போது நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் உடைபட்ட குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு எம்.எல்.ஏ சதாசிவம் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் உடைந்த குழாயை விரைவாக சீரமைத்து கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விரைவில் தண்ணீர் அனுப்புமாறு அவர் கூறியுள்ளார்.