உலக பாரம்பரிய வாரம் இன்று நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது.
இந்நிலையில் சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்களை பார்வையிட இன்று(நவம்பர் 19) சுற்றுலா பயணிகளுக்கு இலவசம் என புராதன தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதேபோல மதுரையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்று திருமலை நாயக்கர் மஹால். இதனை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிடலாம் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. உலக மரபு தினத்தை முன்னிட்டு இன்று முதல் நவ. 25ம் தேதி வரை கட்டணமில்லாமல் பார்வையிட தொல்லியல் துறை அனுமதி வழங்கி உள்ளது.