காக்கிநாடாவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை சீசன் நடைபெறுவதையொட்டி ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா டவுன் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நாளை இரவு 11:45 மணிக்கு கொல்லம் சென்றடையும். காட்பாடி, சேலம் , ஈரோடு, கோவை வழியாக செல்லும் .அதைத் தொடர்ந்து எதிர் திசையில் கொல்லத்தில் இருந்து வரும் 18ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 19ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு காக்கிநாடா டவுன் ரயில் நிலையம் சென்றடையும்.
இதுபோன்று கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழநி வழியாக திருச்செந்தூருக்கு இன்று முதல் தினந்தோறும் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் 4:55 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.45 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும். மறு திசையில் திருச்செந்தூரில் இருந்து தினமும் மதியம் 12:05 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 10:30 மணிக்கு பாலக்காடு சென்றடையும். பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை உட்பட 30 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த இந்த ரயில்சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்களுக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.