தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழலில் இரண்டு வருடங்களுக்கு பிறகு போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளி வந்து கொண்டிருக்கிறது. அதனால் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதனிடையே தமிழகத்தில் நிதிநிலையை சீரமைக்க அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப் பட்டது.
அதாவது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு பல வருடங்களாக அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக வரலாற்றில் முதன் முறையாக அரசு அலுவலகங்களில் 25 ஆயிரம் பணியாளர்கள் கடந்த மே 31-ஆம் தேதி ஓய்வு பெற்றனர். அதுமட்டுமல்லாமல் வரும் கல்வியாண்டில் மேலும் சில ஆசிரியர்கள் பணி நிறைவு செய்ய உள்ளனர். அதன் காரணமாக அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாத காரணத்தால் அரசுத் துறைகளில் இதுவரை 1.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. அத்துடன் 25 ஆயிரம் பணியிடங்கள் காலி ஆகின்றது. அதனால் தமிழகத்தில் மொத்தம் 1.75 லட்சம் பணியிடங்கள் உள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நிரப்பப்பட உள்ளது. இதனால் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.