தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள அதிமுகவும், திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த போதிலும் அது செயல்வடிவம் பெறவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அமைக்கப்பட்ட சாந்தாஷீலா நாயர் குழு எந்த ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.
அதன்பிறகு ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி அமைக்கப்பட்ட வல்லுநர் குழு 2018-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் இதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஓய்வு ஊதியம் கிடைக்காமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
கிட்டத்தட்ட ஓய்வு ஊதியம் ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இனியும் தமிழக அரசு ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.