தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேர்முக மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். மின் வாரிய விதியின்படி, பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆனால் பணிக்கு தேர்வானவர்கள் தமிழ் பாடத்தை படிக்காமல் இருந்திருந்தால் இரண்டு வருடங்களுக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் “தமிழ் மொழி தேர்வில்” கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதிலும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இதையடுத்து ஊழியர்கள் அதற்கு முறையான விளக்கம் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் விதிமுறைகள் இந்த அளவுக்கு கடுமையாக இருந்தபோதும் மின்வாரியத்தில் தமிழ் தெரியாமல் வேலைக்கு சேர்ந்த சிலர் இன்னமும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு இதுதொடர்பாக மின்வாரியத்திற்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், கடந்த 2011-20 வரையிலான 10 ஆண்டுகளில் மின்வாரியத்தில் பணிக்கு சேர்ந்த வெளிமாநிலத்தவர்கள் எத்தனை பேர் ? அவர்களில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் எத்தனை பேர் ? அவ்வாறு பணியில் சேர்ந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன ? என்பது குறித்த விவரங்களை விரிவான அறிக்கையாக விரைவில் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் மின்வாரியத்தில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.