பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமை தாங்கினார்.
இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனமானது மக்களுக்காக துரித போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது என்றார். அதன்பிறகு பெருந்திரள் துரித போக்குவரத்து சேவையை திருச்சியில் அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாகத்தான் தற்போது முதல்கட்ட ஆலோசனையானது நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பெருந்திரள் துரித போக்குவரத்து சேவைக்கான ஆய்வு முடிவடைந்த பிறகு அதை அமைப்பதற்கான இடங்கள் மற்றும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். இதனையடுத்து துரித போக்குவரத்து திட்டத்திற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து தமிழ்நாடு உட்கட்டமைப்பு நகர்புற சேவைகள் மூலமாக ஒருங்கிணைந்த நகர்வுத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும். இந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே பெருந்திரள் துரித போக்குவரத்து சேவை அமைக்கப்படும் என்றார்.