திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதனால் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியை போல திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்துவதற்கு பல்வேறு வசதிகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கோவிலில் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு தனி பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மூத்த குடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனி வரிசை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவிலின் கரையோரம் உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரம் வாசலருகில் முதியவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தனியாக அனுமதிக்கப்படும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மூத்த குடிமக்கள் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 60 வயதை கடந்தவர்கள் இந்த வழியாகச் சென்ற எளிதில் சுவாமி தரிசனம் செய்யலாம்.
அந்தப் பாதையில் செல்லும் முதியவர்கள் அனைவரும் தங்கள் வயதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அட்டையின் அசல் சான்றிதழை காண்பிக்க வேண்டும். இந்த நடைமுறை விரைவில் வர உள்ளது என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.இந்த அறிவிப்பு திருச்செந்தூர் பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.