பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை 50% வரை குறைக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பரவிய கொரோனா 2ஆம் அலை காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மதிப்பெண்கள் ஆனது மதிப்பீட்டு முறையில் வழங்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி கல்வித்துறை பொது தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம்,முதல் திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொதுத் தேர்வு கால அட்டவணையும் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கான இறுதி ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தின் இறுதியில் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வும் வர உள்ளது.
இந்நிலையில் தேர்வுக்கு குறைவான காலமே உள்ளதால் மாணவர்களுக்கு பாடச் சுமையானது அதிகரித்துள்ளது. இச்சூழலில் தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கும் நோக்கில், பாடத்திட்டத்தை 35% முதல் 50% வரை குறைக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தேர்வினை எழுத வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.