உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் சுமார் ஒருமாத காலமாக நீடித்து வருகிறது. இவ்வாறு உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பின் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. எனினும் ரஷ்யா போரிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இதற்கிடையே உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கை தொடர்பாக போலியான செய்திகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தூண்டும் வகையிலான செய்திகளை அகற்றுவதற்கான, ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூகஊடக நிறுவனங்கள் மீதான வழக்கில், சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டு நீதிமன்றம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றுக்கு தடை விதித்தது.
இதற்கு முன்னதாக போலி செய்திகள் குறித்து ட்விட்டரும் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் ரஷ்யாவின் தகவல் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், “கூகுள்” தேடுதளத்திற்கு தடை விதித்து அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. கூகுள் இம்மாதத்தில் ரஷ்யாவில் இணையதளத்தில் எவ்விதமான விளம்பரமும் வெளியிடப்படாது என்று உறுதியளித்து இருந்தது. இருந்தாலும் தவறான தகவல்களை பரப்ப உதவுவதாக கூறிய ரஷ்ய ஒழுங்குமுறை ஆணையம் கூகுளுக்கு தடை விதித்து இருக்கிறது.