மா இலைகளில் 1330 திருக்குறளை எழுதி திருச்சி ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொடியம்பாளையம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அமுதா(48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் புதுச்சேரியில் இருந்து கூகுள் மீட் வாயிலாக நடத்தப்பட்ட உலக சாதனையாளர் போட்டியில் பங்கேற்று உள்ளார். இந்த போட்டியில் 30 மா இலைகளில் 1330 திருக்குறளையும் 20 மணி நேரத்திற்குள் எழுதி சாதனை படைத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து அமுதாவுக்கு பாண்டிச்சேரி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் நடேசன் சான்றிதழ் வழங்கி பாராட்டி உள்ளார். இந்த சாதனை பற்றி அமுதா பேசியபோது, சிறு வயது முதல் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அது பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தனை செய்வேன். மேலும் ஓய்வு நேரத்தில் நிலையில் திருக்குறளை விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன் அதன் பின் ஏன் இதை ஒரு சாதனையாக செய்யக்கூடாது என நினைத்து பயிற்சி எடுத்தேன்.
அதன் பலனாகவே இந்த போட்டியில் கலந்துகொண்டு 20 மணிநேரம் தொடர்ச்சியாக எழுதி இருக்கிறேன். ஏற்கனவே திருக்குறளை கவிதை வடிவில் எளிய முறையில் வரை எழுதி பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளேன். மேலும் 200க்கும் மேற்பட்ட திருக்குறள் மனப்பாடமாகத் தெரியும். 1,300 குறள்களையும் மனப்பாடம் செய்ய பயிற்சி எடுத்து வருகிறேன் என உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார். ஆசிரியரின் சாதனை பற்றி அறிந்து அவரது நண்பர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் அவரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழறிஞர்கள் பலரும் ஆசிரியை அமுதாவிற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.