கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நகரமே வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.இந்நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஜார்ஜா போர் என்ற பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்று இரவு திரும்பினார். அப்போது கூகுள் மேப்பை பார்த்துக் கொண்டே காரை ஓட்டிய ராஜேஷ் பேக்கப்பள்ளி பகுதியை கடந்தார். மழையால் அப்பகுதியில் இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியிருந்தது தெரியாமல் காரை அந்த தரைப்பாலத்திற்குள் இறக்கிவிட்டார்.
இதனால் காரை வெள்ள நீர் சூழ்ந்தது. காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் செல்போன் மூலம் அவசர போலீஸ் உதவியை நாடினார். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து காரை தரைப்பாலத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.