கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குறுக்கு வழியை தேடிய முருகன் கூகுள் மேப் உதவியை நாடியுள்ளார். அதன்படி கூகுள் மேப் மூலம் முருகன் புதுநகர், இம்பீரியல் சாலை வழியாக லாரன்ஸ் ரோட்டுக்கு வந்தார். அங்கு ஒரு சுரங்கப்பாதை இருந்தது. அப்போது அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது. ஏன் இங்கு வந்தாய் என கூறி அவரை சத்தம் போட்டனர்.
இதனையடுத்து கூகுள் மேப் மூலம் இங்கு வந்ததாக முருகன் கூறியதால் ஆட்டோ ஓட்டுநர்கள் சற்று பின்னால் சென்று பேருந்து நிலையத்திற்குள் சென்று திரும்பி செல்லுமாறு தெரிவித்தனர். அதன்படி முருகன் பேருந்து நிலையத்திற்கு லாரியை இயக்கி சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் முருகன் இம்பீரியல் சாலை, அண்ணா பாலம் அருகில் இருக்கும் ஜவான்பவன் சாலை வழியாக சென்றுள்ளார். முன்னதாக லாரன்ஸ் ரோட்டில் ஒருவழிப்பாதையில் சென்று திரும்பியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.