மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவையின் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ சித்திக் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மெட்ரோ ரயிலில் பயணிக்க இனி பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்க வேண்டாம். அதற்கு பதிலாக ரயில்வே நிலையங்களில் ஒட்டப் பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, செல்ல வேண்டிய இடத்தை தேர்வு செய்து பணத்தை கட்டினால் செல்போனில் டிக்கெட் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படும். இதன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கு 20% கட்டண சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கியூஆர் நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் பயணிகளின் நேரம் மிச்சமாகும் என மேலாண்மை இயக்குனர் கூறியுள்ளார். இந்நிலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது தொடங்கப் பட்டுள்ளது.
இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அடையாறு ஆற்றில் மண் பரிசோதனை நடத்தப்படுவதோடு, அருகில் உள்ள கட்டிடங்கள் வலுவானதாக இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர். ஒருவேளை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் போது கட்டிடங்களுக்கு ஏதாவது சேதமானால் அதற்கான முழு பொறுப்பையும் மெட்ரோ ரயில் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மெட்ரோ ரயில் சுரங்க பாதையை அமைப்பதற்காக தற்போது சீனாவில் இருந்து எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்கள் தனித்தனியாக இருப்பதால் அவற்றை பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான தமிழக அரசின் ஒப்புதல் கூடிய விரைவில் கிடைக்கும் எனவும் எம்.ஏ சித்திக் கூறியுள்ளார்.