கோவையில் கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவைமாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 30 வயதான சுவாதி என்பவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் செல்போன் செயலி மூலம் கடன் வாங்கலாம் என்று நினைத்துள்ளார். அப்போது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் ஆப் மூலமாக முதலில் கடன் வாங்கியுள்ளார். பின் அந்த கடனை அடைக்க கூடுதல் கடன் வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய கடன் ரூ 64 ஆயிரமாக உயர்ந்தது. இந்நிலையிலும் சுவாதி தான் பெற்ற கடனுக்கு வட்டியும் சேர்த்து மாதந்தோறும் தவறாமல் செலுத்தியுள்ளார். இதற்கிடையில் சுவாதி கடன் வாங்கிய நிறுவனத்தின் மேலாளர் 24 வயதான அர்சியா ஆப்ரின், துணை மேலாளர் 24 வயதான ரகுமான் செரீப், 27 வயதான யாஸீன் பாஷா, 31 வயதான பர்வீன் ஆகியோர் சுவாதியிடம் கூடுதல் வட்டி கேட்டுள்ளனர்.
அதற்கு சுவாதி தான் குறிப்பிட்ட தேதியில் மாதந்தோறும் பணம் செலுத்துவதால் கூடுதல் வட்டி தர மறுத்துவிட்டார். அப்போது அவர்கள் 4 பேரும் சுவாதியிடம் பணத்தை குறிப்பிட்ட தேதியில் கட்டவில்லை அதனால் கூடுதல் பணம் கட்ட வேண்டும் என்றனர். மேலும் பணத்தை செலுத்த முடியாது என்றால் வேறு நிறுவனங்களில் கடன் வாங்க முடியாதபடி உன்னுடைய ஆவணங்களை உண்மை தன்மை இல்லை என்று கூறி தடுத்திடுவோம் என்று அவர்கள் சுவாதியை மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, காவல்துறையினர் வழக்குப் பதிந்து மிரட்டிய 4 பேரையும் பெங்களூருவில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.