மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பென்ச் புலிகள் காப்பகத்திற்கு அருகே கோண்டே கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புலி ஒன்று நேற்று சென்றது. அங்கு சன்னிலால் படேல்(55) என்கிற நபர் ஒருவர் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது புலி அந்த நபரை அடித்து கொன்றது. இந்நிலையில் சன்னிலாலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடி உள்ளனர். இந்த கூட்டத்தை பார்த்ததும் வயலுக்குள் சென்று மறைந்த புலி திடீரென வந்து அந்த கூட்டத்திற்குள் புகுந்து சிலரை தாக்கி விட்டு தப்பி ஓடி சென்றுள்ளது. இதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கினாலே இது நடந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இரும்பு கம்பிகள், மரக்கட்டைகள் போன்றவற்றை கையில் வைத்திருந்து புலியை பார்த்தால் அடிக்க வேண்டும் என்று காத்திருந்தனர் . இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகள் மீது மரக்கட்டையை வீசி எறிந்ததில் மருத்துவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும் வனத்துறை அதிகாரிகளின் 6 வாகனங்கள் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.