சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் 200 ஆடுகளை வேப்பூர் பகுதிக்கு ஓட்டி வந்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் லட்சுமணன் ஆடுகளை மேய்ச்சலுக்காக எலவனாசூர்கோட்டையிலிருந்து வேப்பூர் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதனால் ஆடுகள் நாலாபுரமும் சிதறி ஓடியது.
ஆனாலும் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த லட்சுமணனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இறந்த ஆடுகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். குழி தோண்டி ஆடுகள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.