தேனியில் ரோந்து சென்ற பறக்கும் படையினர் தனியார் நிறுவனத்திடமிருந்து 5,50,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.தி.மு.க அலுவலகத்திற்கு அருகே தனியார் நிறுவனம் அமைந்துள்ளது.
இந்நிறுவனத்தில் மக்கள் கூட்டமாக சென்று வருவதாக ரோந்து சென்ற பறக்கும் படை அதிகாரியான ரவீந்தருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் பறக்கும் படை காவல்துறையினர் தனியார் நிறுவனத்தினுள் சென்று சோதனை செய்தனர். அப்போது நிறுவனத்தில் உரிய ஆவணமின்றி 5,50,000 ரூபாய் இருந்ததால் பறக்கும் படையினர் அப்பணத்தினை பறிமுதல் செய்தனர்.