அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் அரசு ஒப்பந்தப் புள்ளிகளை வாங்கி தருவதாக கூறி 1.25 கோடி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதோடு சென்னை மாநகராட்சியில் 464 கோடி ரூபாய்க்கும், கோவை மாநகராட்சியில் 346 கோடி ரூபாய்க்கும், விடப்பட்ட டெண்டரில் ஊழல் நடந்ததாக எஸ் பி வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 110 கோடி மதிப்பிலான சொத்துக்கள் லஞ்ச துறையினரால் முடக்கப்பட்டுள்ளன.