தமிழகத்தில் கொரோனா காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்,அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவித்து ஆணையை வெளியிட்டார். தற்போது அரசு ஊழியர்கள் பெற்று வரும் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படி ஜனவரி 1 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.
தற்போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவின்படி அகவிலைப்படி தொடர்பாக ஏற்கனவே பதிவாளர் அலுவலகம் அந்தந்த நிர்வாகப் பிரிவுகள் மூலம் வழங்கியுள்ள அறிவுரைகளை படியும் அகவிலைப்படி வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கி கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.